ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

இடையறு மத நல்லிணக்கத்திற்கு நடந்தது?

கடந்த வாரம் சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோவிலில் நடைபெறவிருந்த வேள்வியில் சிலர் புகுந்து இடையூறு விளைவித்ததுடன் அங்கு வேள்விக்காகவென பக்தர்களால் கொண்டுவரப்பட்ட பிராணிகளையும் எடுத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தமை இந்து மக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அநுராதபுரம் சந்தியில் பல நூறு வருடங்களாக அமைந்திருந்த இஸ்லாமிய மக்களின் புனித ஷியாரம் பகுதியில் கூடிய சிலர் அதனை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். இது குறித்து முஸ்லிம் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விரு விடயங்கள் தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் சமயத் தலைவர்கள் சிலரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்ட போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களைத் தருகின்றோம்.

இந்து வித்தியாநிதி சிவஸ்ரீ

குகானந்த சர்மா

மிருக பலி என்பது பழங்காலந்தொட்டு நிகழ்ந்து வருகின்ற ஒரு கிராமிய வழிபாட்டு முறையாகும். இந்தியாவில் தொன்று தொட்டு இது நடைமுறையில் இருந்து வருகிறது. சைவ சமயத்தில் மாத்திரமன்றி ஏனைய மதங்களிலும் இந்த வழிபாட்டு முறை நடந்தேறி வருகின்றது. எனவே, இந்துக்களின் கிராமிய வழிபாட்டு முறையை நீக்குவதென்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனை வியாபார ரீதியில் நோக்கக் கூடாது.
தத்துவார்த்த ரீதியில் நோக்கினால் எது சரி, எது பிழை என்பதை அறிய முடியாது. எவ்வாறெ னினும் மதங்களின் பழங்கால நடைமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சிந்துவெளி நாகரிகத்திலிருந்தே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. எனவே இவ்விடயத்தில் சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடி நல்ல தீர்வுகளைக் காண வேண்டுமே தவிர எடுத்த எடுப்பில் சரி, பிழை கூறுவது முறையாகாது.




தேசிய மொழிகள், நல்லிணக்க

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

இன்னொரு மத சம்பிரதாயங்களில் மற்றவர்கள் தலையிடுவதற்கு உரிமை கிடையாது. எமது மத உணர்வுகளை இன்னொரு மதத்தின் மீது திணிக்கவும் முடியாது. மிருக பலி என்பது மதரீதியாக காலா காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை நிறுத்துவதாக விருந்தால், மீன் வெட்டுவதையும் நிறுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக நோக்கினால், மிருகங்களை வெட்டாமல் விற்க முடியாது. ஆகவே, முழு காளி கோவில்களிலும் நடைபெறும் மிருக வேள்வியைத் தடுக்க வேண்டுமெனத் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை”.

பிரதியமைச்சர் மேர்வின் சில்வா

முன்னேஸ்வரம் காளி கோவிலில் நான் நடந்து கொண்ட விதம் எந்தக் கவலையையும் எனக்குத் தரவில்லை. நான் அதைப் பற்றி கவலையடையவுமில்லை. அலட்டிக் கொள்ளவும் இல்லை. பரிகாரம் தேடவும் மாட்டேன். இறைவன் எனக்குத் தண்டனை தரப்போவதுமில்லை. நான் யாருக்கும் பயந்தவன் அல்லன். எங்கு வேண்டுமானாலும் எந்த நேரமும் செல்வேன். தப்பைத் தட்டிக் கேட்க தவறமாட்டேன். இந்து மதமும் பெளத்த மதமும் அஹிம்சையைப் போதிப்பவை. அஹிம்சை வழியிலேயே நான் செயற்பட்டேன். மிருக பலி கூடாது என்று பலரும் கூறுகின்றனர். தப்புச் செய்தவர்களைத் தண்டித்து நல்லது செய்பவர்கள் மீது இறைவன் அன்பு காட்டுவார்.


யோகராஜன் எம்.பி. (ஐ.தே.க.)

மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகள் முரட்டுத் தனமானவை. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயிரக்கணக்கான மிருகங்கள் உணவுக்காக வெட்டப்படும் நிலையில் மிருக பலி பூஜை செய்ய என்ன தடை? மேர்வின் சில்வா கோவில் பூசகருடனும் விரும்பத்தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளனர். கோவில் பக்தர்களின் நம்பிக்கையையும் மனங்களையும் உடைத்துள்ளார். இந்த மக்கள் காலா காலமாகச் செய்து வரும் மிருக பலி பூஜையைத் திடீரென தடுத்து நிறுத்தியதன் நோக்கமென்ன கோவில் விவகாரத்திலும் சமய விவகாரத்திலும் எவருக்கும் தலையிட அனுமதி கிடையாது.

சீ. யோகேஸ்வரன் எம்.பி. (த.தே.கூ)

இந்துக் கோவில்களில் மிருகப் பலியைத் தடுப்பதற்கு விரைவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் உள்நோக்கமின்றி தாமாக முன்வந்து அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் அதனை நான் வரவேற்கின்றேன். இந்து ஆலயங்களுக்குள் மிருகப்பலிக்கு இடமளிக்கக் கூடாது. அதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மேர்வின் சில்வா இந்த விடயத்தில் அரசியல் தேட முனைந்தால் அதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

செவ்வாய், 21 ஜூன், 2011

முன்னேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ மஹா பத்திரகாளி அம்மன் தேவஸ்வதானத்தின் வருடாபிஷேத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
ஸ்ரீ முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் தேவஸ்தான வருடாபிஷேகத் திருவிழா

முன்னேஸ்வரம் அருள் மிகு ஸ்ரீ மஹா பத்திரகாளி அம்மன் தேவஸ்தானவருடாபிஷேகம் 21-06-2011 காலை 6.00 மணி முதல் விநாயகர் வழிபாடு யாக பூஜை விசேட மகா புர்ணாகுதி, விசேட தீபாராதனை, வேதஸ்தோத்திர நாத கீத நிர்த்த சமர்ப்பணம், அபிஷேகம் தொடர்ந்து யாக கும்பம் வீதிப்ரதட்சிம் குறிப்பிட்ட சுபமுகூர்த்தத்தில் கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகள் அபிஷேகம், மங்கள தச தர்சனம், யஜமான் அபிஷேகம் தீர்த்த பிரசாதம் வழங்கல் சிவாசார்யர் ஆசியுரை மகா அபிஷேகம் விசேட பூஜை சிவாசார்ய உபசாரத்துடன் மாலை 7.00 மணிக்கு மங்கள வாத்தியங்களும் தளத்தப்பட்டைகளுடன் பத்திரகாளி அம்மன் வீதி வளம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தாள்.

சனி, 18 ஜூன், 2011

விரதமிருக்க வைராக்கியம் தேவை பதிவு செய்த நாள்

விரதத்தின்போது உரத்துப் பேசுவது கூடாது; ஆடல் பாடலில் கவனம் செலுத்தக்கூடாது; கும்பலாக உட்கார்ந்து பேசக்கூடாது. விரதத்தின்போது கோயில் கோயிலாகப் போவதில் லாபமில்லை. வெறும் தலைதெறிக்கிற ஓட்டம்தான் அதில் இருக்கிறது. அமைதி குலைகிறது.
‘‘ஒன்றுக்கு இருந்துட்டு வந்துடறேம்ப்பா...’’
‘‘இதை அப்புறம் பார்த்துக்கலாம். சீக்கிரம் வா’’ என்று இழுத்துக்கொண்டு போனால் மனம் முழுவதும் ஒன்றுக்குப் போவதில்தான் இருக்குமே தவிர, வேறு எந்த சிந்தனையும் ஏற்படாது. இது குழுவாக அலைவதில் உண்டான வேதனை.

விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க, கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க, ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற வைராக்கியம்.

மனம் பாட்டுப்பாட அலையுது வேணாம் பேசாத போ.
மனம் சினிமாவுக்கு போன்னு கேட்குது. வேண்டாம் முடியாதுன்னு சொல்லிடு.மனம் கூடுதலா ரெண்டு கை சர்க்கரைப் பொங்கல் சாப்பிட ஆசைப்படுது.
சாப்பிட்டா, தப்பு வரும். வேணாம் விட்டுடு.
குளித்து, உடம்பை குளிர்வாக்கி சுத்தமாக்கி எங்கேனும் தனியாக அமர்ந்து கொள். சரணம் சொல். ஜபம் செய். உரத்த குரலில் அல்லாமல், முணுமுணுப்பாக அமைதியாக சொல்லலாம். தனித்திருந்து சொல்லலாம். இடையறாது சொல்லலாம். சொல்லிக் கொண்டிருக்கும்போதே மனம் என்ன செய்கிறது, எப்படிச் சொல்கிறது என்று கவனித்து மனதை ஒருமுகப்படுத்த, ஒரே கோட்டில் நிற்கச் செய்கின்ற முயற்சியே விரதத்தின் முக்கிய அங்கம். இதை இடையராது கடைபிடித்தலே வைராக்கியம்.

இப்படிச் சீராக விரதமிருப்பதன் விளைவுகள் என்ன?
நாற்பத்தைந்து நாள் என்பது மிக அற்புதமான விஷயம். உடற் கொதிப்புகள் ஒரு உச்சநிலைக்குப் போய் மெல்ல தாழும். அதேமாதிரி உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மெல்ல அழுத்தி திசை திருப்பி அடக்கி இழுத்துவர நாற்பத்தைந்து நாட்களில் பழகிவிட்டால் ஒரு வருடம் முழுக்க எப்படி இருப்பது என்பதும் நமக்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும். ‘தெரியாம பண்ணிட்டேன்’ என்று அபத்தமாக, விரதமிருப்பவர் பேசமாட்டார். முறையாக விரதம் இருப்பவர் மன வலிமை பெற்று விடுகிறார். அந்த வலிமை வருகிறபோது நல்லதும், தீயதுமாக எதிர்ப்படுபவற்றை மிக அழகாக கையாளுகிறார். துக்கத்தை ஏற்றுக்கொள்கிறார். சந்தோஷத்தை மிதமாக அனுபவிக்கிறார். பேச்சில் தெளிவு வருகிறது. தெளிவு நம்பிக்கையாக மாறுகிறது. நம்பிக்கை நாணயத்தை கொடுக்கிறது. நம்பிக்கையும், நாணயஸ்தருமாக ஒரு மனிதர் ஆகும்போது அவருக்கு சுற்றுப்புறத்தில் நல்ல மரியாதை ஏற்படுகிறது. அந்த மரியாதையை தக்க வைத்துக்கொள்ள மேலும் பலமாக விரதமிருக்க, அந்த விரதத்தின் மகிமையில் பல்வேறு சூட்சுமங்கள் வாழ்க்கையைப் பற்றி அவருக்கு தெரிந்து விடுகின்றன.
‘‘அடடே, கோபம் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்குதா! தேவையில்லாத இதுக்குத்தான் பொறாமைப்படறேனா? கேலியில ஆரம்பிச்சு, குத்தல்ல நகர்ந்து, கடைசியில சண்டையில முடியுது. எதுக்கு கேலி?’’ என்று தெளிவாகி விடுகிறார்.

சினிமாவில் வரும் அழகிகளின் அணிவகுப்பில் மனம் லயிக்காது, இந்தப் பெண்மணிகளால் எனக்கு என்ன புண்ணியம் என்ற கேள்வி வரும். அவர்கள் வேறு. நான் வேறு. வெறுமே சந்திப்பதற்குக்கூட எனக்கு விருப்பமில்லை என்ற நிலை ஏற்படும்.
மார்கழியில் மட்டும் விரதமிருக்காமல் மறுபடியும் பங்குனியில் விரதம் இருக்கலாமா, சித்திரையில்
விரதமிருக்கலாமா என்றெல்லாம் மனம் கணக்கு போடும். எந்தக் கோயிலுக்கும் போக வேண்டாம். எந்தப் பயணமும் மேற்கொள்ள வேண்டாம். பதினைந்து நாள் விரதமிருப்போம். உணவைக் குறைப்போம்; பேச்சைக் குறைப்போம் என்று விரதத்தின் மீது ஈடுபாடு வரும். தீவிரமாக இப்படி முயல்பவருக்கு, இந்த விரத காலத்து குறைவாகப் பேசுதல், குறைவாக உண்ணுதல், குறைவாகத் தூங்குதல்,

குளிர்ச்சியாகக் குளித்தல், இடைவிடாது மந்திர ஜபமோ சரணமோ சொல்லுதல் என்பது வருட முழுவதுக்குமாக ஏற்பட்டுவிடும்.
அதனால் முகத்திலும், உடம்பிலும் பொலிவு கூடும். சுற்றியுள்ளோர் நடுவில் மரியாதை கூடும். விரதத்தின் மகிமையை உணர்ந்து தாங்களும் அதை கடைப்பிடிக்க முயற்சி செய்வார்கள். உங்களிடம் வழிகாட்டச் சொல்லி நிற்பார்கள். இயல்பாக நீங்கள் குருசாமி ஆகிவிடுவீர்கள். பதினெட்டுமுறை மலைக்குப் போனதாலேயே குருசாமி ஆவதல்ல; உள்ளுக்குள்ளே ஒளி கூடியிருப்பதால் ஏற்படுகின்ற தன்மையான குருசாமியாக நீங்கள் மாறுவீர்கள்.

குருவாக இருப்பது என்பது அதிகாரமாக இருப்பதல்ல. அன்போடு இருத்தல். அறிவார்ந்த அன்போடு இருத்தல். ஆவேசம் இல்லாமல் அணுகுதல். அது ஒரு ஆனந்தமான நிலை. விரதம் நிச்சயம் இந்த நிலையைக் கொடுக்கும்.ஒழுங்காக விரதமிருப்பதற்கு நல்ல
வைராக்கியம் தேவை. சாமி பாட்டுகூட கேட்கக்கூடாதா?

அவசியம் என்றால் கேளுங்கள். பாட்டும் இல்லாது விரதமிருங்கள். மனம் எல்லா நேரங்களிலும் ஏதோ பாடிய வண்ணம் சிந்தித்துக் கொண்டிருக்கும். உள்ளேயே பாடிக்கொண்டிருக்கும். இப்படியிருப்பின் மனதை ஒருநிலைப்படுத்த முடியாது. பாட்டு, மன ஒருமையை கலைக்கும். மாறி மாறி வெவ்வேறு பாட்டுகளுக்கு போகும். பாட்டிலும் முழு ஈடுபாடு ஏற்படாது. அரை நினைவாய் பாடும். ஏதோ யோசித்தபடி பாடும். எப்போதும் உள்ளே ஒரு பாட்டு சப்தம்
கேட்டுக் கொண்டே இருக்கும். இது ஆரோக்கியமான மனநிலையல்ல.

விரதம், தியானத்திற்கு அழைத்துப் போக
வேண்டும். தியானம், கடவுள் தேடலின், தன்னை அறிதலின் ஆரம்பம். எனவே, விரதம் என்பது மிகமிக மும்முரமான விஷயம். எந்த இளிப்புகளும் அங்கே இல்லை. விரதம் கொண்டாட்டமல்ல; பண்டிகைகள்தான் கொண்டாட்டம்.
நீங்கள் மற்றவர் போல் வாழவில்லை; தனித்த வழியிலே இருக்கிறீர்கள் என்பதை சொல்வதுதான், உங்களுக்கு நினைவுபடுத்துவதுதான் விரதப் பயிற்சி. விரதகால உடையாக கறுப்போ, பச்சையோ, காவியோ உடுத்தச் சொல்கிறார்கள். நான் தனி என்று அறிவுறுத்த, உடையில் காட்டுகிறார்கள். பிறகு, அந்த உடையை கும்மாளம் போட பயன்படுத்தலாமா?
விரதமிருப்பது மிக கம்பீரமான விஷயம். வருடத்தில் நாற்பத்தைந்து நாட்கள் விரத வாழ்க்கை வாழ்வது, மற்ற நாட்களை நிச்சயம் புனிதப்படுத்தும். தெளிவு கொடுக்கும்.

வருடா வருடம் விரதமிருக்க, உங்கள் தன்மை மேம்படும். ஆனால் நாலு நாட்கள் மாலைபோடுவது எந்தவகையிலும் நியாயமில்லை. அது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயல். ‘செய்வன திருந்தச் செய்’ என்பது நல்லோர் வாக்கு.
உங்களை முன்னேற்றப் பாதைக்கு
அழைத்துப்போகாத செயல்களை செய்வதில்
அர்த்தம் என்ன? நேர்மையான விரதம் நிச்சயம் உங்களுக்கு சீர்மையான வாழ்க்கையை கொண்டு வந்து தரும்.

வெள்ளி, 6 மே, 2011


பக்தி என்ற மனோநிலை

ஆன்மிக ரீதியான சில சந்தேகங்கள், மரபுவழி வந்த பழக்க வழக்கங்கள், ஆசார அனுஷ்டானங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்திருப்பது போன்ற ஒரு தோற்றம் கிடைக்கிறது. எல்லா ஆசாரங்களும் அகந்தை கொண்டவை; அகந்தையை வளர்க்க வழி வகுப்பவை. ‘மேல படாத, நான் மடி’ என்று ஆரம்பித்து ‘என் பூஜையை யாரும் பார்க்கக்கூடாது. அது ரகசியமானது’ என்று கதவு சார்த்திக் கொள்வது வரை அகந்தையின் விஸ்வரூபம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லாம் அறிந்த ஞானிகள் இப்படி வாழ்ந்ததேயில்லை. சுத்தம், தனிமை, மௌனம் என்ற பக்திக்கான விஷயத்தை உரக்க முழங்கும் கூச்சலாக மாற்றிவிட்டார்கள். பக்தி காணாமல் போய், ஆசார அலட்டல் மட்டுமே நிற்கிறது. அகந்தை
மட்டுமே தலைவிரித்தாடுகிறது.கொய்த மலர் குடுமியில், அபிஷேக நீர் வாயில், புத்தம் புதிய மாமிசம் கையில், உடம்பெல்லாம் புழுதி, வியர்வை & திண்ணன் என்கிற வேடன் மலையேறி வந்து வாய்நீரை உமிழ்ந்து மாமிசத்தை படைத்து, தான் சூடியுள்ள பூக்களை எடுத்து சிவலிங்கத்தின் மீது சுற்றி, ‘உண்ணுக ஐயனே, உண்ணுக. பசியாகவும், தனியாகவும் இருந்து களைத்திருக்கிறீர்கள். நானிருக்கிறேன், உண்ணுக’ என்று வேண்டுகிறான்.இறைவன் உண்ணவில்லை. மாறாக கண்ணிலிருந்து ரத்தம் வருகிறது. இந்தப் புல், அந்த இலை என்று ஏதேதோ பிழிந்து வைத்தியம் செய்து பார்க்கிறான். நிற்கவில்லை. என்னமோ உள்ளே தோன்றுகிறது. கண்ணுக்குக் கண்! தன் கண்ணை எடுத்து அப்பினால் ரத்தம் நிற்குமென்று தோன்றுகிறது. தோன்றியவுடனேயே கூரிய அம்பை எடுத்து தன் கண்ணில் பதித்து கண்ணைத் தோண்டி எடுத்து குருதி பெருகிய இறைவன் கண்ணில் வைத்து விடுகிறான். ரத்தம் நின்று விடுகிறது. ஆனால், அடுத்தக் கண்ணில் ரத்தம் வருகிறது. ‘அதனாலென்ன, எனக்குதான் இன்னொரு கண் இருக்கிறதே’ என்று மறுபடியும் அம்பை எடுத்து, அடுத்தக் கண்ணை அறிவதற்காக செருப்பணிந்த காலை அந்த இடத்தில் அடையாளத்துக்காக வைத்துக்கொண்டு இன்னொரு கண்ணையும் தோண்ட முயற்சிக்க, சிவலிங்கத்திலிருந்து ஒரு கை வெளிப்பட்டு ‘நில்லு கண்ணப்ப’ என்று கைப்பிடித்துத் தடுக்கிறது.
வேடர் திண்ணனை இறைவன் தொட்டு தடுத்து கண்ணப்ப என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில், கண்ணப்பர் ஓர் அற்புதம். அந்த கண்ணப்பருக்கு எந்த ஆசாரமும் தெரியாது. அந்த வேடரின் பக்திக்கு முன்பு ஆசார அனுஷ்டானம் திகைத்துப்போய் நிற்கிறது. என்னால் தன் கண்ணை குத்தி இப்படி அப்ப முடியுமா என்று பயந்துபோய் நிற்கிறது. பக்தி என்கிற இடத்திற்கு அழைத்துப் போகத்தான் ஆசார அனுஷ்டானங்கள் உதவி செய்ய வேண்டும். மாறாய் அது தனக்கும் பக்தியில்லாமல், அடுத்தவர் மீதும் அன்பில்லாமல் ஒரு குரூரமான தோற்றமாக மாறிவிடுகிறது.
வேடன் படைத்த மாமிசத்தை அருவறுப்போடு அப்புறப்படுத்திவிட்டு, வில்வத்தால் அந்தணர் பூஜிக்கிறார். அந்தணர் பூஜை செய்த வில்வத்தையெல்லாம், ‘இதென்ன குப்பை, யார் போட்டது’ என்று கடிந்துகொண்டு அப்புறப்படுத்திவிட்டு திண்ணன் மறுபடியும் மாமிசம் படைக்கிறான். இப்படி மாறி மாறி பலநாள் கூத்து நடக்கிறது. எது சரி என்று இறைவனே தீர்ப்பு வழங்குகிறான். அவனே கை நீட்டி திண்ணன் என்ற வேடனை தடுத்து, ‘கண்ணப்ப’ என்று கூப்பிடுகிறான். பக்தியே முழு முதல் விஷயம். பக்தியில்தான் தன் கண்ணை தானே குத்தி தானம் செய்ய முடியும். பக்தியில்தான் ‘தன்னை’ப் பிடுங்கி எடுத்து இறைவன் முன்பு நிவேதனம் செய்ய முடியும். தான் என்ற அகங்காரத்தை ஆசாரங்கள் வளர்க்க, பக்தி ‘தன்னை’ அழிக்கின்ற விஷயத்தை சொல்லித்
தருகிறது. பக்தி என்பது ஒரு பயிற்சி அல்ல. செய்
முறைகளின் குவியல் அல்ல. இடது, வலது, மேல், கீழ் என்ற வாழ்க்கை முறை அல்ல. அதுவொரு மனோ நிலை. தானற்ற இடம். நானே அது என்று ஒன்றான சுகம். இறைவனுடைய கண், தன்னுடைய கண்; தன்னுடைய கண், இறைவனுடைய கண் என்று தானும் இறைவனும் ஒன்றான இடம். அந்த மனோநிலையை யோசிக்க யோசிக்க உடம்பு நடுங்குகிறது. ஆனால் அந்த மனோநிலைக்கு வரவிடாமல் ஆசார அகந்தை தடுக்கிறது.
பூஜை சம்பிரதாயங்களைப் பற்றி ஜனங்கள் கேள்வி கேட்பதும் அதற்கு பலர் பல பத்திரிகையில் பலவிதமான பதில் சொல்வதும் இறுதியில் குழப்பம்தான் ஏற்படுகிறது. பக்தி என்பது சத்தியத்தின் வாசல். பக்தி என்பது குழைந்து, கனிந்து, பரமானந்தமாக நிற்கின்ற நிலை. அப்படிப்பட்ட நிலையில்தான் இறை தரிசனம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. வாடிய மலர்களை, வாயில் தேக்கி வைத்த நீரை, கடவுளுக்கென்று அந்த வேடன் கொடுத்ததை படிக்கும்போது குளிர்சாதனப் பெட்டிப் பூகூட அல்ல. வெறும் குப்பைகளை பூ என்று நினைத்துப் போட்டாலும் இறைவன் ஏற்றுக் கொள்வான் என்றுதான் தோன்றுகிறது. கொடுக்கின்ற பொருள் முக்கியமல்ல. கொடுக்கின்ற மனோநிலை முக்கியம். பூ முக்கியமல்ல. அந்த மனம் முக்கியம்.
ஆசாரங்கள் காலத்திற்குக் காலம் மாறுபடுபவை. குடுமி வைத்துக் கொண்டவருக்குத்தான் முதல் பந்தி என்று சொன்ன காலம் இப்போது இல்லை.
குடுமியைவிட கிராப்பு சௌகரியம். வேட்டியைவிட பேண்ட் சௌகரியம். ஆந்திராவுக்கு அந்தப்பக்கம் போனால் குளிர்காலத்தில் யார் பூசகரோ, அவர் அரைக்கால் சட்டை, ஸ்வெட்டர், மேலே சால்வை, தலையில் குல்லா போட்டுக்கொண்டு கருவறையில் உட்கார்ந்து கொண்டிருப்பதை காணலாம். ‘வந்து சிவலிங்கத்தை கட்டிக்கொள்’ என்று கூப்பிட்டு தட்சிணை கேட்பார்கள். நெற்றியில் குங்குமம் வைப்பார்கள். தென்னிந்தியாவில் இவை அனைத்துமே தவறு. காரணம், இது வெயில் தேசம். மார்கழியிலும் இங்கு இடுப்பு வேட்டியும், மேல் துண்டுமாகவும் நிற்க முடியும். இமயமலை அடிவாரத்தில் ஒரு பூசகரை இப்படி நிற்க சொன்னால் அவர் உடனே சிவலோகப் பதவி
அடைவார். எனவே, இங்கு ஆசாரம் மாறுகிறது.
‘சாஸ்திரம் என்ன சொல்றதுன்னு கேள்வி கேட்கற. சாஸ்திரம் இதைத்தான் சொல்றது. மத்தபடிக்கு நீ என்னவோ பண்ணித் தொலை’ என்று பதில் சொல்வதற்கு பதில் அகங்காரத்தை சொல்லாது இருக்கலாம். உண்மையை விளக்காது இருப்பதற்குப் பதில் பொய் பேசாதிருக்கலாம். ஆசார, அனுஷ்டானங்களை தெரிந்து கொள்வதே தவறா? அனுஷ்டிப்பது குற்றமா? இல்லை. ஒருபொழுதும் இல்லை. என்ன செய்கிறோம் என்று உணர்ந்து செய்யுங்கள். எந்த பூஜை செய்தாலும் எப்படிச் செய்தாலும் மனம் ஒன்றி செய்யுங்கள்.
‘‘ஒரு அமாவாசை தர்ப்பணம் விடறதுல்ல. எங்க இருந்தாலும் செய்துடறது’’ என்பது வெறும் கர்வம். இது அடுத்தவருக்கு சொல்லிக் கொள்வதற்காக செய்வதல்ல. நம் முன்னோர்களை நினைத்து உருகி உருகி செய்வது. நான் இன்று வளர்ந்து நிற்பதற்கு நீதானே காரணம் என்று நன்றியில் நனைவது. சிராத்தம் என்பது சிரத்தையாகச் செய்வது. தர்ப்பைப் புல்லைப் போட்டு ‘இதமாசனம்’ என்று சொல்கிறபோது அங்கே இறந்துபோன முன்னோர்கள் அமர்வதை மனக்கண்ணில் காண வேண்டும்.
எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனிதே வருக...
&என்று பாடுகிறபோது முருகன் வருகின்ற அடியோசை, சிலம்பொலி காதில் கேட்க வேண்டும்.
நான் நாற்பது தொட்டிகளில் பூச்செடிகள் வளர்க்கிறேன். கடையிலும் பூக்கள் வாங்குகிறேன். எவை எந்தப்பூ என்று பார்ப்பதில்லை. மனம் ஒருமைப்படுத்தவே பூக்களை உபயோகிக்கிறேன்.பூர்வஜென்ம புண்ணியமிது உன்னைக் கண்டது; இது போன ஜென்ம வாசனையில் அருகில் வந்தது...&என்று பாடுகிறபோது என் குருவின் நினைப்பில் கண்ணில் நீர் கட்டுகிறது. நல்ல மனைவி, நல்ல தாய் தகப்பன், நல்ல பிள்ளைகளோடு நல்ல குரு எவ்வளவு பெரிய நிம்மதி என்று மனம் உணருகிறது. நாம் எது செய்தாலும் உண்மையை நோக்கி அடிவைக்க அது உதவி செய்ய வேண்டும். இதுவே முக்கியம்.

சனி, 28 ஆகஸ்ட், 2010


Bookmark and Share

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்ரகாளி அம்மன்

முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் கும்பாபிஷேக உற்சவத்தின் போது எடுக்கப்பட்ட படம், வீடியோ க்களை காணலாம். இங்கு கோவிலுக்காக அரும் பணியாற்றிய லஷ்மி அம்மாளுக்கு கோவில் பிரதம தர்மகத்தா தேசபந்து திரு சிவபாதசுந்தரம் கௌரவிப்பதையும் படத்தில் காணலாம்.